தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை!

 
பள்ளிகள் பள்ளிகள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலையின் காரணமாக, மாணவர்களின் நலன் கருதிப் பள்ளிகள் திறக்கும் தேதியைச் சற்றே தள்ளிவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உட்படப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஜூன் முதல் வாரத்தில் வானிலை நிலவரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளிகள்

இந்தச் சூழ்நிலையில், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் நேரில் கலந்துகொண்டு, தற்போதைய வானிலை நிலவரம் மற்றும் பள்ளிகள் திறப்புக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விரிவாக விவாதித்து வருகின்றனர்.

பள்ளிகள்

வானிலை ஆய்வு மையத்திடமிருந்து பெறப்படும் அதிகாரப்பூர்வ வெப்ப அலை எச்சரிக்கை விவரங்களின் அடிப்படையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் நடத்தி வரும் இந்த உயர் மட்ட ஆலோசனை முடிந்தவுடன், தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1-இல் திறக்கப்படுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான இறுதி அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.