அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (ஜூன் 04) பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் வரவிருக்கும் 2026-27 கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை விறுவிறுப்பாக அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைப் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்குத் துறை ரீதியான முக்கியச் சுற்றறிக்கை ஒன்று முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையில், புதிய கல்வியாண்டில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆரம்பம் முதலே சிறப்புப் பயிற்சிகள் மற்றும் திருப்புதல் தேர்வுகளை நடத்தி அவர்களைத் தேர்வுக்குத் தயார்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. கல்விப் பணிகளில் தொய்வின்றிச் செயல்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த புதிய கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் மட்டும் சுமார் 4 லட்சம் புதிய மாணவர்களை சேர்ப்பதற்குப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் முக்கிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. நாளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
