பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து விபத்து... 11 வயது மாணவர் பரிதாப பலி!

 
மாணவர்

மும்பை மாநகரத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு வழக்கம்போல் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரமாக இருந்த ஒரு பெரிய மரம் திடீரென வேரோடு சாய்ந்து அந்தப் பேருந்தின் மீது விழுந்தது. இந்த விபத்தின் காரணமாகப் பேருந்தின் மேற்பகுதி நசுங்கிப் பெரும் சேதமடைந்தது. விபத்து நடந்த சமயத்தில் பேருந்துக்குள் பள்ளிக்குழந்தைகள் இருந்ததால் அங்குப் பெரும் கூச்சலும் அலறல் சத்தமும் கேட்டது.

இந்தக் கொடூரமான விபத்தில் சிக்கிப் பேருந்துக்குள் இருந்த 11 வயது மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த ஐந்து மாணவர்கள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடிவந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தைகளைப் பத்திரமாக வெளியே மீட்டனர்.

காயமடைந்த 5  மாணவர்களும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளான தகவல் அறிந்து மாணவர்களின் பெற்றோர் பதற்றத்துடன் ஓடிவந்து தங்களின் பிள்ளைகளைத் தேடினர். இந்தத் துயரமான விபத்துச் சம்பவம் மும்பை முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.