திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி: காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
காரைக்காலில் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, நாளை மார்ச் 6ம் தேதி காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இசிதா ராட்தி இந்த விடுமுறை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு நலன் கருதியும், உள்ளூர் பக்தர்களும் விழாவில் கலந்துக் கொள்ள வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை பொருந்தும்.

நாளை மார்ச் 6ம் தேதி காலை 8:24 மணிக்கு சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பிரவேசிக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவின் போது, பக்தர்கள் நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபடுவது வழக்கம்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்து வருவதால், 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்காகத் தற்காலிகப் பந்தல்கள், குடிநீர் வசதி மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நளன் குளத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர பகவான் அபயஹஸ்த முத்திரையுடன் அருள் பாலிப்பது தனிச்சிறப்பாகும். இத்தலத்தில் சனி பகவான் அனுகிரக மூர்த்தியாக விளங்குவதால், சனிப்பெயர்ச்சி அன்று வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொதுத்தேர்வுகள் அல்லது பிற தேர்வுகள் ஏதேனும் இருந்தால், அவை வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
