இன்று 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. கனமழை தொடரும்!
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இன்று ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் வரும் 26-ந்தேதி வரை அடுத்த 6 நாட்களுக்குத் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வரும் 23-ந்தேதியன்று வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மழை மேலும் தொடர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, கனமழை எதிரொலியாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளனர்.
