தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு - முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. புதிய கல்வியாண்டை (2026-27) உற்சாகத்துடன் தொடங்க லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கிய கோடை விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படவுள்ளன. புதிய கல்வியாண்டை முன்னிட்டு, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை இன்முகத்துடன் வரவேற்க தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், தூய்மைப் பணிகளும் தீவிரமாகச் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களின் படிப்பிற்கு எவ்வித தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் பள்ளிக் கல்வித்துறை உறுதியாக உள்ளது. இதற்காக, நாளை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்களை (சீருடை, காலணிகள் போன்றவை) தங்குதடையின்றி வழங்குவதற்குப் பள்ளிக் கல்வித்துறை விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் வகுப்புகள் உடனே தொடங்குவதோடு, மாணவர்கள் புதிய உற்சாகத்துடன் தங்களது புதிய வகுப்பறைகளில் கல்வியைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், நாளை காலை முதலே பள்ளி வளாகங்கள் மீண்டும் கலைகட்டத் தொடங்கும்.
