பள்ளிகள் திறப்பு ஜூன் 4-ம் தேதி தள்ளி வைப்பு - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதியைப் பள்ளிக் கல்வித்துறை முறைப்படி மாற்றியமைத்துள்ளது. முன்னதாக வெவ்வேறு தேதிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 4-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பின்படி, நடப்பு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கு 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் ஒரு தேதியிலும், 4 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான உயர்தரப் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதியும் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் வெவ்வேறு வகுப்புகளில் படிப்பதால், வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளைத் திறப்பது தங்களுக்குப் போக்குவரத்து மற்றும் குடும்ப நிர்வாக ரீதியாகப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் எனப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் அரசுக்குக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்துத் தமிழக அரசு விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டது. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாகப் பின்வரும் அத்தியாவசியப் பணிகளை முழுமையாக நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ள வளாகங்களில் பாதுகாப்பான தூய்மையான குடிநீர் வசதியை உறுதி செய்தல், வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்துதல், மாணவர்களுக்கான பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சீரமைப்புகளை ஆய்வு செய்தல்.

அனைத்து மாவட்டங்களின் முன்னேற்பாட்டு அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்த பின்னர், தமிழக அரசு புதிய அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஜூன் 4-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், மாணவர்களின் நலன், உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை 100 சதவீதம் உறுதி செய்யும் அனைத்துப் பணிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக எடுத்து முடிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
