தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்... 8 நகரங்களில் சதத்தைக் கடந்தது... மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை!

 
 வெயிலே தெரியல... இன்றுடன் கத்திரி வெயில் அக்னி நட்சத்திரம்  நிறைவு!  வெயிலே தெரியல... இன்றுடன் கத்திரி வெயில் அக்னி நட்சத்திரம்  நிறைவு!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சூரியன் தனது ஆக்ரோஷத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் 8 முக்கிய நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று கரூர் பரமத்தியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இங்கு அனல் காற்று வீசியதால் பிற்பகல் வேளையில் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. கரூரைத் தொடர்ந்து ஈரோடு மற்றும் வேலூரில் தலா 104 டிகிரி வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது.

வெயில்

மதுரை விமான நிலையம்: 102 டிகிரி, நாமக்கல்: 101 டிகிரி, திருச்சி: 101 டிகிரி, கோவை: 101 டிகிரி, மதுரை நகர்: 101 டிகிரி ஆகிய இடங்களில் சதத்தைக் கடந்தது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வெப்பம் 100-ஐத் தொடாவிட்டாலும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் 'புழுக்கம்' அதிகமாகக் காணப்பட்டது.

வெயிலின் தகிப்பு தாளாமல் பொதுமக்கள் இளநீர், நுங்கு, கரும்பு ஜூஸ் மற்றும் தர்பூசணி கடைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். மதிய நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு முகத்தில் அனல் காற்று அடிப்பதால், பலரும் தங்களது பயணங்களைத் தள்ளிப்போட்டுள்ளனர். கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை என்றால், வரும் மே மாதத்தில் வெப்பம் இன்னும் எத்தனை டிகிரி எகிறும் என்கிற பீதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

வெயில் வெப்பம் மாணவிகள் கல்லூரி

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் தங்களை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தாராளமாகத் தண்ணீர் குடிக்கவும். மதிய நேரங்களில் (12 மணி முதல் 4 மணி வரை) தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும். பருத்தி ஆடைகளை அணியவும். தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பம் மேலும் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.