நெதர்லாந்து கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் விலகல் - புதிய கேப்டனாக பாஸ் டி லீடே நியமனம்!

 
நெதர்லாந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் பாஸ் டி லீடே

நெதர்லாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தத் தகவலை நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

யுட்ரெக்ட் பகுதியில் நடைபெற்ற 'ஐ.சி.சி சி.டபிள்யூ.சி லீக் 2' போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எட்வர்ட்ஸ் தனது கேப்டன் பதவியைத் துறப்பதாக சக வீரர்களிடம் தெரிவித்தார். இந்த முடிவு குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரியான் குக் மற்றும் சில முக்கிய நிர்வாகிகளுடன் நீண்ட நாட்களாக ஆலோசித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கேப்டன்சியிலிருந்து விலகிய போதிலும், ஒரு விக்கெட் கீப்பர்-பேட்டராக அணிக்காகத் தனது சிறந்த பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாக எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்து

2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பீட்டர் சீலார் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து எட்வர்ட்ஸ் கேப்டனாகப் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நெதர்லாந்து அணி 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 24 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மேலும் 50 டி20 போட்டிகளிலும் அணியை வழிநடத்தியுள்ளார்.

2022 டி20 உலகக்கோப்பையிலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பையிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் போன்ற முன்னணி அணிகளை வீழ்த்தி நெதர்லாந்து அணி வரலாற்றுச் சாதனை படைக்க இவரது தலைமையானது முக்கியக் காரணமாக அமைந்தது.

ஸ்காட் எட்வர்ட்ஸ் விலகியதைத் தொடர்ந்து, நெதர்லாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பாஸ் டி லீடே புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். லீக் 2 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் அணியை வழிநடத்துவார்.