அலறும் மக்கள்... ஒரே நாளில் சிக்கிமில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்!
தேசிய நில அதிர்வு மையத்தின்தகவல்படி, சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஒரே நாளில் 4 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இன்று மதியம் சுமார் 1.12 மணியளவில் சிக்கிமின் மங்கன் பகுதியில் ரிக்டர் அளவில் 3.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதற்கு முன்னதாக இன்று காலை மற்றும் மதிய வேளைகளில் மூன்று முறை லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டன. ரிக்டர் அளவில் இவை குறைந்த அளவிலேயே பதிவாகியிருந்தாலும், அடுத்தடுத்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்களுக்குப் பெரிய அளவிலான சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சிக்கிம் மாநிலம் இமயமலைத் தொடரின் உயர் நில அதிர்வு மண்டலத்தில் (Zone V) அமைந்துள்ளதால், அங்கு கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பிப்ரவரி தொடக்கத்தில் நம்சி (Namchi) மற்றும் கேங்டாக் (Gangtok) பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். பாதுகாப்பு முன்னேற்பாடுகளைக் கவனிக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
