மும்மொழித் திட்டத்தைத் திணிக்கிறதா ஒன்றிய அரசு?... எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு இன்னும் பதவி ஏற்காத தற்காலிகச் சூழலைப் பயன்படுத்தி, ஒன்றிய பாஜக அரசு 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தின் மூலம் மும்மொழித் திட்டத்தைத் திணிப்பதாக எஸ்டிபிஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் இருமொழிக் கொள்கையைச் சிதைக்க நடக்கும் இந்த முயற்சிக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முழுமையான அரசு பொறுப்பில் இல்லாத நேரத்தில், இத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது ஜனநாயகப் படுகொலையாகும் என அவர் சாடியுள்ளார்.

தமிழகத்தின் கல்வி உரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் விரைவில் அமையவுள்ள புதிய அரசுக்கே உள்ளது என்றும், அதைக் கொல்லைப்புற வழியாகப் பறிக்க நினைப்பது அரசியல் அறமற்ற செயல் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கல்வி மேம்பாட்டிற்கான நிதியை வழங்க வேண்டும் என்றால் 'தேசியக் கல்விக் கொள்கையை' ஏற்க வேண்டும் என நிபந்தனை விதிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட சவாலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் மொழி உணர்வோடும் கல்விச் சுதந்திரத்தோடும் விளையாடுவதை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய ஆட்சி அமையவுள்ள இந்த வேளையில், இந்தித் திணிப்பை மறைமுகமாக மேற்கொள்ளும் 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தை எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட எந்தவொரு ஜனநாயக சக்தியும் ஒருபோதும் அனுமதிக்காது என முகம்மது முபாரக் எச்சரித்துள்ளார். தமிழகத்தின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் மீது எதேச்சாதிகாரப் போக்கில் மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
