குமரியில் கடல் சீற்றம்... குடியிருப்பு பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரக் கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான கடல் சீற்றம் மற்றும் தொடர் மழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதப்பதுடன், மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாகக் கடுமையான கடல் சீற்றம் நிலவி வருகிறது. இதனிடையே பெய்து வரும் தொடர் மழையினாலும், கடல் அலைகளின் சீற்றத்தினாலும் கடல் நீரானது அங்குள்ள பொழிமுகம் வழியாகக் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.
முக்கியமாக, அப்பகுதியில் உள்ள பொழிமுகக் கால்வாயில் நீண்ட நாட்களாக மண் தூர்வாரப்படாமல் அப்படியே கிடந்துள்ளது. இதன் காரணமாக, உள்நுழைந்த கடல் நீர் மற்றும் மழை நீர் ஆகியவை மீண்டும் கடலுக்குள் வடிய முடியாமல் அங்கேயே தேங்கத் தொடங்கியது.

கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகத் தேங்கிய தண்ணீர், அருகிலுள்ள மாதாநகர் மற்றும் வின்சன் நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம்போல் சூழ்ந்தது. திடீரென நள்ளிரவிலும், அதிகாலையிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இந்தத் திடீர் வெள்ளத்தால் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வீடுகளில் இருந்த அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும், கட்டில், பீரோ, டிவி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களும் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன.

கடல் நீர் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும், கிணறுகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களிலும் கடல் நீர் கலந்துவிட்டதால் குடிநீருக்கும் மக்கள் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பொழிமுகக் கால்வாயில் உள்ள மண் திட்டுகளை அகற்றித் தண்ணீரை வடிய வைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
