ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது அடித்து செல்லப்பட்ட மாணவி - தேடும் பணிகள் தீவிரம்!

 
ஒகேனக்கல்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவி ஒருவர் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஜருகு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி அவிநிஷா, தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தார்.

ஒகேனக்கல் காவிரி

வார விடுமுறையை முன்னிட்டு தனது உறவினர்களுடன் ஒகேனக்கலிற்குச் சுற்றுலா சென்றுள்ள அவர், மெயின் அருவி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய மாணவி அவிநிஷா ஆற்றின் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்ற போதிலும் அது முடியாததால், உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,000 கனஅடியாக அதிகரிப்பு!

தகவலறிந்த ஒகேனக்கல் காவல்துறையினரும், மீட்புப் படையினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றின் ஆழமான பகுதிகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வந்தாலும், மாணவி இதுவரை மீட்கப்படவில்லை. இச்சம்பவம் ஒகேனக்கல் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.