நிர்வாக மாற்றங்கள்... தலைமைச் செயலகத்தில் புகைப்படங்கள் அதிரடி அகற்றம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இதன் எதிரொலியாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான முதற்கட்டப் பணிகள் மிகத் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. அமைச்சர்களின் அறைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் புகைப்படங்கள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன.
அமைச்சர்களின் அலுவலகங்களில் இருந்த திமுக தொடர்பான கட்சிச் சின்னங்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் முந்தைய ஆட்சியைக் குறிக்கும் அடையாளங்களை அகற்றும் பணியில் அரசுப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு அறையிலும் உள்ள பழைய கோப்புகள் மற்றும் தளவாடப் பொருட்களைச் சீரமைக்கும் பணிகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் புதிய அரசு அமைவதற்கான நிர்வாக ரீதியான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் தலைமைச் செயலக வளாகத்தில் ஒரு புதிய அரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 59 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், புதிய அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தலைமைச் செயலகம் தயாராகி வருகிறது. புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்க உள்ள நிலையில், அவர்களின் அலுவலகங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அமையவுள்ள புதிய அரசின் கொள்கை மற்றும் வழிகாட்டுதலின்படி, நிர்வாக அமைப்புகளில் கூடுதல் மாற்றங்கள் செய்யப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
