ஆட்சி மாற்றம்: தலைமைச் செயலகத்தில் புகைப்படங்கள் அதிரடியாக அகற்றம்!

 
Stalin Stalin

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் 16 அமைச்சர்கள் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமாவைத் தொடர்ந்து, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான முதற்கட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமைச்சர்களின் அறைகளில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களை அகற்றும் பணியில் அரசுப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் பெயர் பலகைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பதற்கான நிர்வாக ரீதியான முன்னேற்பாடுகள் தலைமைச் செயலக வளாகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தவெக தலைமையிலான புதிய அரசு அமையவுள்ளதால், கோட்டை வளாகமே புதிய அரசியல் சூழலுக்குத் தயாராகி வருகிறது.