தலைமைச் செயலகத்தில் பரபரப்பு... தூக்க மாத்திரை சாப்பிட்டு இரு பெண்கள் தற்கொலை முயற்சி!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தின் 4வது நுழைவு வாயில் முன்பாக இன்று இரு பெண்கள் திடீரென தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அங்குப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். திடீரென மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக அந்த இரு பெண்களும் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தனர்.

மயங்கி விழுந்த பெண்களை மீட்ட அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் இருவரையும் மீட்டு அவசர ஊர்தியில் ஏற்றி சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயர்மட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் முக்கியப் பகுதியான தலைமைச் செயலக வாயில் முன்பாகவே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தப் பெண்கள் எதற்காக இந்த முடிவை எடுத்தார்கள், அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த தலைமைச் செயலகப் பகுதியில் பெண்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
