மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் - திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப நிகழ்வு!

 
திருப்பரங்குன்றம் தீபத்தூண்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கவும் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தடை உத்தரவு நேற்று இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (நவம்பர் 24) கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டம் முழுவதும் நவம்பர் 23-ஆம் தேதி இரவு 9 மணி முதல், நவம்பர் 25-ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் போலீசார் குவிப்பு பாதுகாப்பு

தீபம் ஏற்றும் விவகாரத்தைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மற்றும் மதுரைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அமைதியைப் பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

144 தடை உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் மதுரை மாவட்டம் முழுவதும் எவ்விதப் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கல்தூண்

உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கோயில் பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே மலை உச்சிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாகக் கூடுபவர்கள் அல்லது அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயல்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுத் தீவிர வாகனச் சோதனை மற்றும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.