கள்ளக்காதலை நேரில் பார்த்ததால் விபரீதம்... 10ம் வகுப்பு மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில், தங்களது ரகசிய உறவைப் பார்த்து விட்டதாகக் கூறி 10-ம் வகுப்பு மாணவனுக்கு குளிர்பானத்தில் களைக்கொல்லி மருந்தைக் கலந்து கொடுத்த இளம்பெண் மற்றும் சிறுவன் என இருவரையும் கைது செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குளிர்பானத்தில் விஷம் கலந்துக் கொடுக்கப்பட்ட நிலையில், மாணவர் மருத்துவமனையில் 18 நாட்கள் சிகிச்சை பெற்றும், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கல்லூரு பகுதியைச் சேர்ந்த ரவி (15). சத்துப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த ரவி, தசரா விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த போது, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அபர்ணா (19) என்ற பெண்ணுக்கும், 14 வயது சிறுவனுக்கும் இடையே இருந்த நெருக்கத்தைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் தகாத உறவுக் கொண்டதை நேரில் பார்த்ததால் இந்த விவகாரத்தை குடும்பத்தினரிடம் தெரிவிப்பதாக ரவி இருவரையும் எச்சரித்துள்ளார்.
தங்களது தகாத உறவுக்கு இடைஞ்சலாக ரவி இருப்பதாலும், இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிந்து விடும் என்பதாலும் இருவரும் சேர்ந்து ரவியைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன்படி, ஆசைவார்த்தைகள் பேசி ரவியை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்ற சிறுவன், களைக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட ரவி முதலில் கம்மம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் வாரங்கல் எம்.ஜி.எம். மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு 18 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அபர்ணாவையும் சிறுவனையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவன் சிறார் கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
