“சீமான் ஒரு ‘சுற்றுலா’ வேட்பாளர்!” - அவருக்கு காரைக்குடியுடன் தொடர்பே கிடையாது!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தேர்தல் அரசியல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதைக் குறிப்பிட்ட கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "சீமான் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறை ஒரு தொகுதி, இந்த முறை காரைக்குடி என அவர் மாறிக்கொண்டே இருப்பதால், அவருக்கு இந்தத் மண்ணுடன் எந்தத் தொடர்பும் இல்லை."

ஒரு தொகுதியின் மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட அந்த ஊரைச் சேர்ந்த உள்ளூர் வேட்பாளர்களே சரியாக இருப்பார்கள். வெளி ஊரிலிருந்து வந்து போட்டியிடுபவர்களால் மக்களுடன் நெருக்கமாக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
சீமானின் பேச்சுக்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அரசியலில் நகைச்சுவை உணர்வு இருப்பது அவசியம் தான்" என அவர் கிண்டலாகப் பதிலளித்தார்.

தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்சனையான நீட் தேர்வு குறித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், "மத்தியில் பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் வரை, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. பாஜகவின் கொள்கையே தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள் தான்" எனத் தெரிவித்தார்.
காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் நிலையில், கார்த்தி சிதம்பரம் தனது சொந்தத் தொகுதியில் முகாமிட்டுத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சீமானின் வருகை காரைக்குடி தொகுதியில் மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ள சூழலில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.
