எவனிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்... பொது வேட்பாளர் பேச்சுக்கு சீமான் ஆவேசம்!
தமிழகத்தில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இது தொடர்பாக நெல்லையில் பேசிய சீமான், தன்னைப் பொது வேட்பாளர் எனக் கற்பனையாகப் பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எத்தனை முறை தோற்றாலும் தோற்பேனே தவிர, யாரிடமும் போய் நின்று என்னை ஆதரிக்குமாறு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், இனி பேச்சை விடச் செயல் மட்டுமே தங்கள் அடையாளம் என்றும், அம்பாசமுத்திரத்தில் இருந்து தங்கள் கோட்டையைத் திறப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
