அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக சீமான்.. தவெக-வுக்கு எதிராக ஒன்று சேரும் திமுக, அதிமுக?!
தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, தவெக அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 'பொது வேட்பாளராக' களம் இறக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் விராலிமலை.

இதில் திருச்சி கிழக்குத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடப் போவதாகப் பரவிய தகவல் குறித்து நேற்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இன்னும் முடிவு செய்யவில்லை" என்று அவர் பதிலளித்தார். அவர் போட்டியிடப் போவதை மறுக்காததால் திமுக தொண்டர்களிடையே அது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிழக்குத் தொகுதி பரபரப்புக்கு மத்தியிலேயே, அம்பாசமுத்திரம் தொகுதியில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராகப் பலமான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, நாம் தமிழர் கட்சியின் சீமானைப் பொது வேட்பாளராக நிறுத்த ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் தவெக-வின் வாக்கு வங்கியைப் பிரித்து நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தொடர்ந்து தேர்தல்களைச் சந்தித்து வரும் சீமான், இதுவரை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீமான் முதன்முதலாக 2016 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியிலும், தொடர்ந்து 2021 தேர்தலில் சென்னை திருவொற்றியூர் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பொதுச் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் களம் கண்ட சீமான், அங்கேயும் தோல்வியைத் தழுவியதன் மூலம் தனது தேர்தல் பயணத்தில் மூன்றாவது தொடர் தோல்வியைச் சந்தித்தார்.
கடந்த தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட சீமான், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிரான பொது வேட்பாளராக அம்பாசமுத்திரத்தில் நிறுத்தப்பட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டுமா மற்றும் நெல்லை மாவட்டத்தின் கள நிலவரம் எவ்வாறு மாறப்போகிறது என்பதைத் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகே பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
