சீமானுக்கு அடுத்த அதிர்ச்சி... இயக்குநர் மு.களஞ்சியம் கட்சியிலிருந்து விலகல்... சீமானுக்கு அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு!
நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் பிரபல திரைப்பட இயக்குநருமான மு.களஞ்சியம் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இயக்குநர் மு.களஞ்சியம் தான் எழுதியுள்ள விலகல் கடிதத்தில், கட்சியில் சமீபகாலமாக அரங்கேறி வரும் சில அரசியல் நகர்வுகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் தனது கடுமையான வருத்தங்களைப் பதிவு செய்துள்ளார். கட்சியில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள உள்கட்சி மாற்றங்கள் மற்றும் மாற்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீது வைக்கப்படும் சில விமர்சனங்கள் தனக்குத் தனிப்பட்ட முறையில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே தங்களது சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலை உமிழ்வதும், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களில் இழிவான விமர்சனங்களை முன்வைப்பதும் தமக்கு உடன்பாடில்லாத ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து வரும் தமிழ்த்தேசிய அரசியல் என்பது உயரிய பண்பாட்டைக் கொண்டது என்று குறிப்பிட்டுள்ள மு.களஞ்சியம், தற்போதைய உறுப்பினர்களின் இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனப் போக்குகள் நாம் பேசும் தமிழ்த்தேசிய பண்பாட்டிற்கு எவ்விதத்திலும் உகந்தது அல்ல என்று தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஆரம்பக்காலக் கட்டத்தில் இருந்து சீமானுடன் இணைந்து பயணித்த முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் மு.களஞ்சியத்தின் இந்த திடீர் விலகல் முடிவும், அவர் முன்வைத்துள்ள உள்கட்சி விமர்சனங்களும் தமிழக அரசியல் தளத்திலும், நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
