ஜூலை 17 முதல் ஆன்லைனில் சுயப்பதிவு செய்யலாம்... 33 கேள்விகளுடன் வீடு தேடி வரும் அதிகாரிகள்!
இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள 2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளான 'வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு' வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக 33 கேள்விகள் அடங்கிய விபரங்களுடன் அதிகாரிகள் வீடு தேடி வரவுள்ளனர்.
நாட்டில் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இதற்கு முன்னதாக கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2021-ல் நடக்க வேண்டிய பணிகள், கொரோனா பெருத்தொற்று பரவல் காரணமாகக் காலவரம்பின்றி தள்ளிப்போனது. இந்தச் சூழலில், இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் 2027-ம் ஆண்டில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்துத் தமிழ்நாடு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளின் இயக்குநரும், முதன்மை தலைமை அதிகாரியுமான எம்.சுந்தரேஷ் பாபு ஐ.ஏ.எஸ் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில், "இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக இது அமையவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகளுக்கு முன்னதாக, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையவழியில் தங்களின் சுய விபரங்களைப் பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் அனைவரும் வரும் ஜூலை 17-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாகத் தங்களின் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிஜிட்டல் சுயப்பதிவின் போது, பொதுமக்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் மொழி, குடும்பத் தலைவரின் பெயர், அலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். ஒருமுறை இதில் விபரங்களைப் பதிவு செய்துவிட்டால், அதனை மீண்டும் மாற்ற இயலாது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் பதிவிட வேண்டும்."
ஆன்லைன் சுயப்பதிவு காலம் முடிந்தவுடன், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு வந்து விபரங்களைச் சேகரிப்பார்கள். இந்த முதற்கட்ட வீடுகள் கணக்கெடுப்பின் போது மொத்தம் 33 வகைப்பாடுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படும்.

குறிப்பாக, வீட்டின் கட்டுமானப் பொருட்கள், வீட்டில் உள்ள அடிப்படை வசதிகள், குடிநீர் ஆதாரம், சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்வாதாரப் பின்னணிகள் குறித்த 33 கேள்விகள் இதில் இடம்பெறும். மொபைல் செயலி மூலமாக அதிகாரிகள் இந்தத் தரவுகளைச் சேகரிக்க உள்ளனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் இந்தத் தனிமனித விபரங்கள் அனைத்தும் சட்டம் 1948-ன் படி மிகவும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் வைக்கப்படும் என்று இயக்குநர் சுந்தரேஷ் பாபு உறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையே, மாஸ்டர் ட்ரெய்னர்களுக்கான தீவிரப் பயிற்சிகள் சென்னையில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இம்முதற்கட்டப் பணிகள் முடிந்த பின்னர், இரண்டாம் கட்டமாக கல்வி, கலாச்சாரம் மற்றும் சாதி வாரியான சமூக-பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு (Population Enumeration) 2027 பிப்ரவரியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
