செம கெத்து... மைசூரு தசராவில் 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் ‘பிரசாந்தா’ யானை!
Oct 16, 2026, 09:57 IST
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலத்தில், 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து செல்லும் யானையாக 54 வயதான பிரசாந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு வரும் அக்டோபர் 21ம் தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. அதில் அம்பாரியைச் சுமந்து பிரசாந்தா யானை கம்பீரமாக வலம் வர உள்ளது.
மைசூரு தசரா விழாவில் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்க அம்பாரியைச் சுமந்து வந்த அபிமன்யு யானைக்கு 60 வயது நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு தங்க அம்பாரியைச் சுமக்கப்போகும் யானை எது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்காக பிரசாந்தா, மகேந்திரா, தனஞ்செயா, சுக்ரீவா, ஏகலவ்யா ஆகிய 5 யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

