செம அப்டேட்... வாட்ஸ்அப்பில் இனி மெசேஜ் ஷெட்யூல் செய்யலாம் - விடிய விடிய காத்திருக்க தேவையில்லை!
வாட்ஸ்அப் செயலி தனது பயனர்களின் வசதிக்காகப் பல்வேறு புதிய அம்சங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயனர்கள் தங்களது குறுஞ்செய்திகளைச் சரியான நேரத்தில் தானாகவே அனுப்பும் 'மெசேஜ் ஷெடூலிங்' என்ற புதிய வசதியைத் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்குச் சோதனை முறையில் வழங்கி வருகிறது.
இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் தங்களது குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இணையதள இணைப்புகளை அனுப்ப வேண்டிய குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே தேர்வு செய்ய முடியும். குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதற்கொண்டு அதிகபட்சமாக 2 வாரங்கள் வரை முன்கூட்டியே செய்திகளைத் திட்டமிட்டு வைக்கும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரம் வந்ததும், பயனர் மீண்டும் நேரடியாக வாட்ஸ்அப் செயலியைத் திறந்து அனுப்ப வேண்டிய அவசியமின்றிச் செய்திகள் தானாகவே சென்று சேரும். மேலும், அந்தச் சமயத்தில் செல்போன் இணைய இணைப்பில் இல்லாவிட்டாலும் கூட இச்செய்தி அனுப்பப்படும் வகையில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழு மற்றும் தனிநபர் உரையாடல்கள்: தனிப்பட்ட உரையாடல்கள் மட்டுமின்றி, வாட்ஸ்அப் குழுக்களிலும் இந்தச் சேவையை எளிதாகப் பயன்படுத்த முடியும். அனுப்புவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள செய்திகளைப் பிரத்யேகப் பகுதியில் பார்ப்பதற்கும், தேவைப்பட்டால் அவை அனுப்பப்படுவதற்கு முன்பாக மாற்றங்கள் செய்வதற்கு அல்லது நீக்குவதற்கும் விருப்பத்தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

நள்ளிரவில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பது, முக்கியமான கூட்டங்கள் குறித்த நினைவூட்டல்கள் அனுப்புவது மற்றும் அலுவலகச் சார்ந்த தொடர்புகளுக்குச் சரியான நேரத்தில் தகவல்களைப் பகிர்வது போன்றவற்றுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி சோதனை அடிப்படையில் கிடைக்கப்பெற்றுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த பிறகு, அனைத்து ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்தச் சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
