செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: 2-வது நாளாக சிபிசிஐடி விசாரணை தீவிரம்

 
senji

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் மாயமான 7 வயது சிறுமி ஹேமாவதியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் இரண்டாவது நாளாக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறுமியின் வீட்டுக்குச் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள், அவரது தாயார் பவானியிடம் பிறந்தநாள் கொண்டாட்டம், சிறுமி தூங்கிய நேரம், அவர் காணாமல் போனது தெரியவந்த சூழல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரித்தனர். மேலும், சிறுமி அழும் சத்தம் கேட்டதாகக் கூறிய அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணிடமும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, சத்தியமங்கலம் போலீசார் இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களையும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சிறுமி குறித்து இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.