"செங்கோட்டையன் அப்படிப் பேசியிருக்கக் கூடாது" - துரை வைகோ அதிருப்தி!
"அதிமுகவின் தற்போதைய நிலை விரைவில் மதிமுகவைப் போலாகிவிடும்" எனக் கூறிய மூத்த அரசியல்வாதியும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனின் பேச்சுக்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தனது வருத்தத்தையும் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், மதிமுகவைச் சிறுமைப்படுத்தும் வகையில் பேசியிருக்கக் கூடாது; அவரது பேச்சு மதிமுக தொண்டர்களைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது. அவர் வேண்டுமென்றே இப்படிப் பேசியிருக்க வாய்ப்பில்லை என்றும், வாய் தவறிப் பேசியிருக்கலாம் என்பதால் வருங்காலங்களில் இதுபோன்ற பேச்சுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதவாதத்திற்கும் ஊழல்வாதத்திற்கும் எதிராக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியில், தமிழ்நாட்டில் அந்த இரண்டிற்கும் எதிராகச் செயல்படும் முதலமைச்சர் விஜய் இணைவதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது.
தவெக தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் முதலமைச்சர் விஜய்யை "வருங்காலப் பிரதமர்" எனக் கூறுவதில் எவ்விதத் தவறும் இல்லை. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போதைய முடிவை முதலமைச்சர் கைவிட்டுள்ளார்; இருப்பினும் சென்னைக்கு பெரிய விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயம் என்பதால் அதனைச் செயல்படுத்த வேண்டும்.
தவெக ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், தவெகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
