செங்கோட்டையனின் 'ரூட் மேப்' தயார் - ஏப்ரல் முதல் வாரத்தில் விஜய் பிரச்சாரம் ஆரம்பம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவரும், தற்போது தவெக-வின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ. செங்கோட்டையன், விஜய்யின் இந்தப் பிரச்சாரப் பயணத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப்பயணங்களை பலமுறை வெற்றிகரமாக வடிவமைத்தவர் செங்கோட்டையன். எங்குப் பிரச்சாரத்தைத் தொடங்கினால் வெற்றி கிடைக்கும், எந்தெந்த பகுதிகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் அவர் கைதேர்ந்தவர்.

விஜய்யின் வாகனப் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் திறந்தவெளி வேன் பிரச்சாரம் ஆகியவற்றிற்கான வழித்தடங்களை செங்கோட்டையன் ஏற்கனவே தயார் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்குச் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். "எந்த ஒரு காரணத்திற்காகவும் தேர்தல் ஆணையத்தால் வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படக் கூடாது. அந்த அளவிற்குத் துல்லியமாக ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும். வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் மற்றும் உறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள், ஒரு வார காலத்திற்குள் தங்களது உறுதிமொழிப் பத்திரத்தைத் தலைமை கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விஜய்யின் வருகைக்காகவும், தேர்தல் பணிகளுக்காகவும் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் தற்போது தனது கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' பணிகளுக்காக மும்பை சென்றுள்ள நிலையில், அங்கிருந்து திரும்பியதும் ஏப்ரல் முதல் வாரத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவார். இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
