பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பு!
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (98) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
தற்போது 98 வயதாகும் எல்.கே. அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் நேற்று மாலை 8 மணியளவில் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் கோளாறுகள் காரணமாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தற்போது அவருக்கு மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். மருத்துவமனை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, எல்.கே. அத்வானியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பின் கீழ் அவர் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்திலும் இதே போன்ற உடல்நலப் பிரச்சினை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி அரசுப் பொறுப்பேற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியன்று எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துப் பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அரசியல் வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த தலைவர் எல்.கே. அத்வானி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும், தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
