காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சூரஜ் ஹெக்டே காலமானார்... ராகுல் காந்தி இரங்கல்!

 
ராகுல் ராகுல்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், இந்திய இளைஞர் காங்கிரஸின் முன்னாள் பொறுப்பாளருமான சூரஜ் எம்.என். ஹெக்டே திடீரென காலமானார். கட்சியின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அவரின் இந்த மரணம் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரஜ் ஹெக்டே மறைவுக்கு அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சூரஜ் ஹெக்டே அவர்களுக்கு இளைஞர் காங்கிரஸ் என்பது வெறும் ஒரு பணியாக மட்டும் இருக்கவில்லை என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நீதி மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடும் இளம் இந்தியர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என்றும் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார். அவரின் இந்த இழப்பு காங்கிரஸ் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் என்று கூறியுள்ள அவர், சூரஜ் ஹெக்டேவின் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தனது ஆறுதலைப் பதிவிட்டுள்ளார்.