மருத்துவமனையில் பெண் மருத்துவருக்குப் பாலியல் துன்புறுத்தல் - சீனியர் டாக்டர் கைது!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூற yப்படும் மூத்த மருத்துவர் வினு என்பவரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மருத்துவமனை வளாகத்திலேயே நடைபெற்ற இச்சம்பவம் சக மருத்துவ வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நெடுமங்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஒருவர், நேற்று நண்பகல் வேளையில் நோயாளி ஒருவரின் சிகிச்சை முறை குறித்து ஆலோசிப்பதற்காக மூத்த மருத்துவர் வினுவின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அறைக்குள் தனியாக இருந்த மூத்த மருத்துவர் வினு, பெண் பயிற்சி மருத்துவரிடம் பாலியல் ரீதியில் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மருத்துவர் உடனடியாக வெளியில் வந்து, சக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துக் கண்ணீருடன் விவரித்துள்ளார். மூத்த மருத்துவர் ஒருவரே பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவல் மருத்துவமனை முழுவதும் காட்டுத்தீப் போல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த சக பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக வினுவின் அறையை முற்றுகையிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துாருக்கு நீதி வழங்கக் கோரியும், உடனே அவரைக் கைது செய்யக் கோரியும் ஊழியர்கள் அறைக் கதவை மூடி மூத்த மருத்துவர் வினுவைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியதைத் தொடர்ந்து, தகவலறிந்து விரைந்து வந்த நெடுமங்காடு காவல் நிலையக் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் மூத்த மருத்துவர் வினு மீது வன்கொடுமைச் சட்டம் மற்றும் பாலியல் தொல்லைப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட டாக்டர் வினு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார் எனத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனைகளிலேயே பெண் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இத்தகைய சம்பவங்கள் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
