மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

 
நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஆர். நல்லக்கண்ணு (101) அவர்களின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நூறு வயதைக் கடந்த நிலையிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு, கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

நல்லக்கண்ணு

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வென்டிலேட்டர் (செயற்கை சுவாசக் கருவி) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

தன் வாழ்நாள் முழுவதும் பொதுநலனுக்காகவும், ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் நல்லக்கண்ணு. அரசு தனக்கு வழங்கிய விருதுத் தொகையை அப்படியே கட்சிக்கும் அரசுக்கும் திருப்பி வழங்கியவர். "தமிழக அரசியலின் தூய்மையான முகம்" என்று அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்படுபவர். அவரது உடல்நிலை தேறி மீண்டும் நலம் பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.