அடுத்தடுத்து விலகும் மூத்த அதிகாரிகள்... TNRERA தலைவர் சிவ்தாஸ் மீனா மற்றும் உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா!
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம், தமிழக அரசு மற்றும் சிவில் சர்வீஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையை முறைப்படுத்தவும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இயங்கி வரும் முக்கிய அமைப்பான TNRERA-வின் உயர்மட்ட அதிகாரிகள் அடுத்தடுத்துப் பதவிகளைத் துறந்து வருகின்றனர். TNRERA அமைப்பின் தற்போதைய தலைவராகச் செயல்பட்டு வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் மற்றும் அதன் முதன்மை உறுப்பினர்களான சுப்பிரமணியம், சுகுமார் ஆகியோர் தங்களது பதவிகளை இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.
ஏற்கனவே சங்கர் ஜிவால் ஐபிஎஸ், அபய் குமார் சிங் ஐஏஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து அடுத்தடுத்து விலகியிருந்தனர். அந்தச் சலசலப்பு அடங்குவதற்குள், தற்போது TNRERA அமைப்பின் ஒட்டுமொத்த உயர்மட்டக் குழுவும் கூண்டோடு விலகியிருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அரசு நிர்வாகப் பொறுப்புகளில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது பதவிக் காலம் முடிவதற்கு முன்னரே அடுத்தடுத்துத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மற்றும் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, புதிய கொள்கை முடிவுகளைச் செயல்படுத்துவதில் நிலவும் நிர்வாகச் சிக்கல்கள் அல்லது தனிப்பட்ட காரணங்களால் இந்த விலகல்கள் அரங்கேறி இருக்கலாம் எனத் தலைமைச் செயலக மூத்த அதிகாரிகள் தரப்பில் முணுமுணுக்கப்படுகிறது.
முக்கியமான அதிகாரிகள் திடீரென விலகியுள்ளதால், TNRERA-வின் அன்றாட வழக்கு விசாரணைகள் மற்றும் புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்குவதில் தற்காலிகத் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. காலியாக உள்ள இந்த உயர் பதவிகளுக்குப் புதிய அதிகாரிகளை நியமிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
