ஆந்திராவில் பரபரப்பு... நடிகை ரோஜா கைது - குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!

 
ரோஜா

ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜாவைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

நகரி தொகுதிக்கு உட்பட்ட விஜயபுரம் மண்டலம் இல்லத்தூர் பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.டி.சி. வேட்பாளராகப் போட்டியிட்ட உதயகிரி தேவி, முதலில் 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்துத் தெலுங்கு தேசம் கட்சித் தரப்பில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

ரோஜா மகள்

இதன் பின்னர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை மையத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ஜெயபிரதா 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டது.

வெற்றி அறிவிப்பில் திடீரென மாற்றம் செய்யப்பட்டதைக் கேட்டு கொந்தளித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் நடிகையுமான ரோஜா, வேட்பாளர் உதயகிரி தேவி மற்றும் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து அங்குள்ள அரசுக் கல்லூரி முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ரோஜா செல்வமணி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, "வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முகவர்களை அனுமதிப்பதில் காவல்துறையும் அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்தனர். அதிகார துஷ்பிரயோகம் செய்து வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய முறைகேடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்தொகுதியில் மீண்டும் வெளிப்படையான முறையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தர்ணாவை கைவிட மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ரோஜாவை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இச்சம்பவம் நகரி பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.