பாலிவுட்டில் பரபரப்பு... நடிகர் ரன்வீர் சிங்கிற்குத் தடை விதிப்பு; ரூ.45 கோடி இழப்பீடு கோரி தயாரிப்பாளர்கள் நடவடிக்கை!

 
ரன்வீர்சிங் ரன்வீர்சிங்

டான் 3 பட சர்ச்சை விவகாரத்தில், தயாரிப்பாளர்களின் புகாரைத் தொடர்ந்து நடிகர் ரன்வீர்சிங்கிற்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்தியத் திரை உலகில் முன்னணி நட்சத்திரங்கள் கடைசி நேரத்தில் திரைப்படங்களிலிருந்து விலகுவது தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்ற வாதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக, இயக்குநர் ஃபர்ஹான் அக்தரின் 'டான் 3' திரைப்படத்திலிருந்து நடிகர் ரன்வீர் சிங்  கடைசி நேரத்தில் விலகிய விவகாரத்தில், மேற்கு இந்திய சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு ரன்வீர் சிங்கிற்கு எதிராக ஒட்டுமொத்தத் திரையுலகம் தழுவிய ஒத்துழையாமை உத்தரவைப் பிறப்பித்து, அவருக்குத் திறம்படத் தடை விதித்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான எக்ஸெல் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஃபர்ஹான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானி தயாரிப்பில், ஷாருக்கானுக்குப் பதிலாக ரன்வீர் சிங் 'டான் 3' திரைப்படத்தில் நடிப்பார் என்று கடந்த 2023 ஆகஸ்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்புத் தொடங்குவதற்குச் சரியாக 10 நாட்களுக்கு முன்பு, ரன்வீர் சிங் அப்படத்திலிருந்து திடீரென விலகியுள்ளார். இதனால், முன்தயாரிப்புப் பணிகளுக்காகப் பல கோடிகளைச் செலவழித்திருந்த தயாரிப்பு நிறுவனம் அசுர அதிர்ச்சியடைந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் எக்ஸெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று நடைபெற்ற அவசரச் செய்தியாளர் சந்திப்பில் FWICE அமைப்பின் தலைமை ஆலோசகர் அசோக் பண்டிட் இந்தத் தடை உத்தரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, 'டான் 3' திரைப்படத்தின் முன்தயாரிப்புச் செலவுகளுக்காக ஏற்பட்ட 45 கோடி ரூபாய் இழப்பீட்டை ரன்வீர் சிங் தயாரிப்பாளர்களுக்குத் திருப்பித் தந்து, இந்தச் சர்ச்சையைத் தீர்க்கும் வரை இந்தியாவில் உள்ள எந்தவொரு தயாரிப்பாளரோ, தொழில்நுட்பக் கலைஞரோ அல்லது தொழிலாளர்களோ அவருடன் இணைந்து பணியாற்றக் கூடாது என FWICE கடுமையான ஒத்துழையாமை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தற்பொழுது

இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய FWICE முயன்ற போது, "இப்பிரச்சினையை விவாதிக்கத் தகுந்த மாற்று மன்றம் தேவை" எனக் கூறி கூட்டமைப்பின் விவாதங்களை ரன்வீர் சிங் நிராகரித்ததே இந்த தடைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. "ஒரே குடும்பமாகச் செயல்படும் திரையுலகில், பெரிய நடிகர்களின் இத்தகைய கடைசி நேரப் பொறுப்பற்ற வெளியேற்றங்கள் பொழுதுபோக்குத் துறையின் ஸ்திரத்தன்மைக்கே அச்சுறுத்தல்" என FWICE தனது அறிக்கையில் கண்டித்துள்ளது.

மறுபுறம், ரன்வீர் சிங் 'டான் 3' படத்திலிருந்து விலகியதற்கு அவரது அண்மைக்காலபாக்ஸ் ஆபீஸ் சாதனைகளே காரணம் என்று திரை உலக வர்த்தகப் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்பொழுது

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து சமீபத்தில் வெளியான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' உளவுத் த்ரில்லர் திரைப்படம் உலகளவில் ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்து, இந்திய சினிமாவின் எல்லா காலத்திற்குமான மிகச்சிறந்த வணிக மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் காரணமாக, ரன்வீர் சிங் தனது வரவிருக்கும் படங்களின் வரிசையை முழுமையாக மறுபரிசீலனை செய்துள்ளார்.

தற்பொழுது

தற்பொழுது அவர் மும்பை பின்னணியில் உருவாகும் 'பிரளய்'  என்ற பிரம்மாண்ட ஸோம்பி த்ரில்லர் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருவதுடன், 'மா கசம் பிலிம்ஸ்' என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் FWICE விதித்துள்ள இந்தத் தடை உத்தரவு ரன்வீர் சிங்கின் திரையுலகப் பயணத்தில் ஒரு மிகப்பெரிய சட்டரீதியான சவாலை ஏற்படுத்தியுள்ளது.