சென்னையில் பரபரப்பு... 1,100 போதை மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது!
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கும் நோக்கில், காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பெருமளவிலான போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு பெண் உட்பட இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு முன்னணி கூரியர் நிலையத்திற்கு, ஒரு பிரபல மருத்துவமனையின் பெயரில் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வந்துள்ளதாகத் தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பார்சலை வாங்குவதற்காக வந்த குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த லீஸ்ரீ என்ற பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.

போலீசார் அந்த கூரியர் பார்சலை பிரித்துச் சோதனையிட்ட போது, அதில் மருத்துவப் பயன்பாட்டிற்கு அன்றி, போதைக்காகப் பயன்படுத்தப்படும் அரசால் தடை செய்யப்பட்ட 1,100 'டாபென்டாடால்' போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார், லீஸ்ரீயைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, சொகுசு கார் ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவர் சென்னை காசிமேடு காவல் நிலையத்தின் 'பி' பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியான செந்தில் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் ரூபாய் 60,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, செந்திலைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட லீஸ்ரீ மற்றும் செந்தில் ஆகிய இருவர் மீதும் போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் தற்பொழுது நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகரப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை வேரோடு ஒழிக்கும் நோக்கில் இத்தகைய தீவிரக் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனத் தாம்பரம் மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
