தாராபுரத்தில் பரபரப்பு... தவெக - நாதக தொண்டர்களிடையே வாக்குவாதம், மோதல் - நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களத்தில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் ரோடு ஷோவின் போது, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் வாக்குவாதத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மீனாட்சிபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் திறந்த வாகனத்தில் ரோடு ஷோ மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதே பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த தவெக தொண்டர்கள் விசில் அடித்து 'TVK.. TVK..' என பலத்த கோஷங்களை எழுப்பினர்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்களது கட்சியின் கொடியை அசைத்துத் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்ததுடன், தவெகவினர் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வாகனத்தை முன்னோக்கிச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் நாதக வேட்பாளர் கார்த்திகாவும், தொண்டர்களும் விஜய்யின் ரோடு ஷோவுக்கு இடையூறு செய்வதாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
