கர்நாடகாவில் பரபரப்பு... அமைச்சரவையில் மாற்றமா?! - 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் டெல்லியில் முகாம்!
கர்நாடக மாநில அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி திருப்பமாக, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் மாற்றங்களைக் கோரி, 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பயணம்: அரசு பதவி ஏற்று சுமார் மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தி மூத்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முதன்முறை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் கொண்ட குழு நேற்று டெல்லிக்குச் சென்றது.

நீண்டகாலமாக அமைச்சர்களாக இருப்பவர்களை நீக்கிவிட்டு, இதுவரை வாய்ப்பு கிடைக்காத 20 முதல் 22 மூத்த எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கை. மேலும், முதன்முறை எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு ஐந்து அமைச்சரவை இடங்களை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, "எம்.எல்.ஏ-க்கள் டெல்லி செல்வதில் தவறில்லை. அமைச்சரவை மாற்றம் குறித்த இறுதி முடிவை கட்சி மேலிடமே எடுக்கும்" என்று கூறியுள்ளார்.
தற்போது அமைச்சரவையில் பி. நாகேந்திரா மற்றும் கே.என். ராஜண்ணா ஆகியோரின் ராஜினாமாவால் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையில், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தரப்புக்கும், முதல்வர் தரப்புக்கும் இடையே நிலவும் அதிகாரப் பகிர்வு மற்றும் தலைமை மாற்றக் கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த எம்.எல்.ஏ-க்களின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 2028 தேர்தலை இலக்காகக் கொண்டு, புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க மேலிடம் சம்மதிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
