கரூரில் பரபரப்பு... நீதிமன்றத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!
கரூர் - திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
நேற்று காலை நீதிமன்றப் பணிகள் வழக்கம்போல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிக்கு ஒரு மர்ம மின்னஞ்சல் வந்தது. அதில், நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், உடனடியாக இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், கரூர் மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமையா தலைமையிலான 7 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் விரைந்து வந்தனர். பாதுகாப்பு கருதி நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, நீதிமன்ற அறைகள், கழிவறைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் வளாகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தத் தீவிர சோதனையின் முடிவில், நீதிமன்றத்தில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி வெறும் 'புரளி' என்பது உறுதி செய்யப்பட்டது.

இதன்பின்னரே நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர் மீண்டும் நீதிமன்றப் பணிகள் தொடங்கின. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
