கரூரில் பரபரப்பு... கஞ்சா போதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!
திருப்பூர் மாவட்டம் (கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்) தட்டான் தோட்டம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே தனது மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளையன் என்கிற பாலசுப்ரமணியம் (45), இவரது மனைவி மலர் (40). இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்துடன் திருப்பூர் தட்டான் தோட்டம் முதல் வீதி பகுதியில் வசித்து வந்த பாலசுப்பிரமணியம், அப்பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் லோடுமேன் வேலை பார்த்து வந்துள்ளார்.

பாலசுப்பிரமணியத்திற்கு மது அருந்தும் பழக்கமும், கஞ்சா போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் மலர் கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர், தான் திருந்திவிட்டதாகச் சத்தியம் செய்து பாலசுப்பிரமணியம் அவரை அழைத்து வந்துள்ளார்.
இருப்பினும் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளாத பாலசுப்பிரமணியம், சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு மீண்டும் குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது தனது மனைவியின் தாயாரிடம் (மாமியார்) சண்டையிட்டு அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.
இதைக் தட்டிக் கேட்ட மனைவி மலருடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற பாலசுப்பிரமணியம், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை (இரும்பு ராடு) எடுத்து மலரின் தலையில் ஓங்கி பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து நிலைகுலைந்து கீழே சரிந்த மலர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட பாலசுப்பிரமணியம் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர், உயிரிழந்த மலரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், திருப்பூர் மாநகர தெற்கு காவல் துறை ஆணையர் ஆகாஷ் ஜோஷி நேரில் சென்று தடயங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். தலைமறைவாகியுள்ள பாலசுப்பிரமணியத்தைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது மற்றும் கஞ்சா போன்ற போதைப்பழக்கங்கள் குடும்பங்களுக்குள் எத்தகைய கோரமான வன்முறைகளையும் இழப்புகளையும் ஏற்படுத்துகிறது என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
