கூடங்குளத்தில் பரபரப்பு... காவல் நிலையத்தில் இளைஞர் விஷம் குடித்த விவகாரத்தில் 2 காவலர்கள் சஸ்பெண்ட்!

 
கூடங்குளம் காவல் நிலையம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்‌ட இளைஞர் ஒருவர் பூச்சிகொல்லி மருந்தை உட்க்கொண்ட சம்பவத்தில், பணியில் கவனக்குறைவாக இருந்த 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

காவல கிணறு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (32) என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாகக் கூடங்குளம் காவல்துறையினரிடம் பிடிபட்டார். அவரைப் பிடித்த கூடங்குளம் தலைமைக்காவலர் சிவகுமார் மற்றும் காவலர் வேல்முருகன் ஆகியோர் ரமேஷ்குமாரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென ரமேஷ்குமார் தான் வைத்திருந்த பையில் இருந்து பூச்சிகொல்லி மருந்தை எடுத்து அசைபோட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை உடனடியாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்துத் திருநெல்வேலி எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், பணியில் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் செயல்பட்டதாகக் கூறி, தலைமைக் காவலர் சிவகுமார் மற்றும் காவலர் வேல்முருகன் ஆகிய இருவரையும் பணிநீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டார்.