மயிலாடுதுறையில் பரபரப்பு... பயங்கர சத்தத்துடன் வீட்டில் இடி இறங்கியதால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

 
மயிலாடுதுறை இடி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பெருஞ்சேரி கிராமத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் இடி தாக்கத்தால் வீடு கடுமையாகச் சேதமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அமைந்துள்ள பெருஞ்சேரி கிராமத்தில் மின்வாரிய ஓய்வுபெற்ற ஊழியரான பார்த்தசாரதி என்பவரது வீடு அமைந்துள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் இந்த இயற்கை விபத்து நிகழ்ந்துள்ளது.

பயங்கர சத்தத்துடன் வீட்டின் மீது இடி இறங்கியதில், வீட்டின் மின்சார சர்வீஸ் லைன் மற்றும் கான்கிரீட் தூண்கள் பலத்த சேதமடைந்தன. மேலும், இடியின் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வாற்றல் காரணமாக எதிரே உள்ள வீடுகளிலும் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இடி மின்னல்

இடி மின்னல் தாக்கியதில் வீட்டிலிருந்த மின்சார மீட்டர், தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, மற்றும் துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. இதன் மொத்த மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் தவிர்க்கப்பட்ட போதிலும், மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ள இந்தக் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.