பெரம்பூரில் பரபரப்பு... விஜய் பிரசாரத்திற்குப் பாதுகாப்பில்லை - அதிகாரிகளை மாற்றக் கோரி தவெக புகார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று பெரம்பூர் தொகுதியில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கினார். ஆனால், திட்டமிட்டபடி பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமிடல் குளறுபடிகள் பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததாகத் தவெக குற்றம் சாட்டியுள்ளது.
விஜய்யின் பிரசார வாகனத்தைச் சுற்றிலும் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முண்டியடித்ததில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கட்சியின் இணைப்புப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார்.

பெரம்பூரில் இருந்து கொளத்தூர் வரை செல்லும் வழியில் எவ்வித போக்குவரத்துச் சீரமைப்பும் செய்யப்படவில்லை. இதனால் பிரசார வாகனம் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, உரிய நேரத்திற்குப் பொதுமக்களைச் சந்திக்க முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ரோடு-ஷோ பிரசாரங்களுக்கு அனுமதி அளிக்கும் காவல்துறை, விஜய்யின் திறந்த வாகனப் பிரசாரங்களுக்குத் முட்டுக்கட்டை போடுவதாகத் தவெக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது. சில உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இன்னும் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களாகச் செயல்படுவதாகவும், வேண்டுமென்றே தவெக-வின் பிரசார அனுமதியைத் தாமதப்படுத்துவதாகவும் நிர்மல் குமார் சாடியுள்ளார்.

ஜனநாயக முறைப்படி சமமான களத்தை உறுதி செய்யத் தவறிய அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தவெக வலியுறுத்தியுள்ளது.
நிர்மல் குமார் அளித்த மனுவில், "பெரம்பூரில் இருந்து கொளத்தூர் வரை செல்ல வேண்டிய பிரசாரப் பயணம், காவல்துறையின் மெத்தனப்போக்கால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெரம்பூரில் பிரசாரக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை "ஜனநாயகத்தின் மீதான பாசிசத் தாக்குதல்" என விஜய் விமர்சித்திருந்தார். தற்போது பிரசாரம் தொடங்கிய முதல் நாளிலேயே பாதுகாப்பு குறித்த புகார் எழுப்பப்பட்டுள்ளது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
