ராஜஸ்தானில் பரபரப்பு... பிரசவத்திற்குப் பின் அடுத்தடுத்து 5 பெண்கள் உயிரிழப்பு!

 
கர்ப்பிணி

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் உள்ள அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்ற ஆறு நாட்களுக்குள் 5 பிரசவித்த தாய்மார்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களிலேயே பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் அஜாக்கிரதை, அறுவை சிகிச்சை அரங்கில் நிலவிய சுகாதாரக் குறைபாடு அல்லது தவறான மருந்து ஊசி செலுத்தப்பட்டதே இந்த அகால மரணங்களுக்குக் காரணம் என அவர்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் உயிரிழந்த பெண்கள் அனைவருக்கும் பிரசவத்தின் போது கடுமையான மருத்துவச் சிக்கல்கள் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி

எனினும், அடுத்தடுத்து 5 பெண்கள் உயிரிழந்துள்ளதால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் மருத்துவக் குறைபாடுகள் அல்லது தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத் துறை சார்பில் உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பில்வாரா மகாத்மா காந்தி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், உயர்மட்டக் குழுவின் விசாரணை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.