சேலத்தில் பரபரப்பு.. ஜாமீனில் வந்த தவெக பிரமுகர் மீண்டும் பாலியல் வழக்கில் கைது!

 
சேலம் தவெக பாலியல்

 

 

சேலம் அருகே பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி வந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தமிழக வெற்றி கழகத்தின் பிரமுகர் மணிகண்டன், மற்றொரு பெண் அளித்த பாலியல் தொல்லை புகாரின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலம் சின்னப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தவெக பிரமுகர் மணிகண்டன். இவர் அப்பகுதியில் உள்ள ஏழைப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களுக்குக் கடன் தருவதாகக் கூறி ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

ஆபாச வீடியோ

இக்கொடூரச் சம்பவத்தில் ஏற்கனவே கைதான மணிகண்டன், சமீபத்தில் தான் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

தானும் மணிகண்டனிடம் கடன் வாங்கியிருந்ததாகவும், அதைப் பயன்படுத்தி அவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த பள்ளப்பட்டி காவல்துறையினர், தவெக பிரமுகர் மணிகண்டனைக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.