சேலத்தில் பரபரப்பு... மாணவர் கண்முன்னே ஆசிரியை வெட்டிக்கொலை!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்த பெண் ஆசிரியர், பள்ளி வளாகத்திலேயே அவரது கணவரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஓமலூர் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இன்று மதியம் பள்ளி வளாகத்தில் அவர் இருந்தபோது, அங்கு வந்த அவரது கணவர் விஜய்முருகன் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீவித்யாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியை ஸ்ரீவித்யா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி நேரத்தில், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்முன்னே இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீவித்யா மற்றும் விஜய்முருகன் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய்முருகன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்தவுடன் ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஸ்ரீவித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய விஜய்முருகனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அரசுப் பள்ளி வளாகத்திலேயே பட்டப்பகலில் ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
