சீர்காழியில் பரபரப்பு... இட்லி கடைக்காரர் வீட்டில் உலோகச் சிலைகள், அதி நவீன துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தள்ளுவண்டி இட்லி கடை வைத்து நடத்தி வந்தபடியே, குறி சொல்லும் தொழில் செய்து வந்த கணவன்-மனைவி உட்பட 3 பேரை, புராதன உலோகச் சிலைகள், பிஸ்டல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருக்க முயன்ற வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் காவல் ஆய்வாளர் கமல்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பேரைப் பிடித்துச் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 4 பழங்கால உலோகச் சிலைகள், கத்தி மற்றும் மயக்க மருந்தான குளோரோஃபார்ம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களை உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கைதானவர்கள் சீர்காழி அறியா பிள்ளை குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (45), அவரது மனைவி ரோஷினி (35) மற்றும் விழுந்திட சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹாதி (25) என்பது தெரிய வந்தது. சுரேஷும் அவரது மனைவியும் அறியா பிள்ளை குளக்கரையில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வந்தனர். காலை, மாலை நேரங்களில் இட்லி வியாபாரம் செய்வதோடு, மீதமுள்ள நேரத்தில் சீர்காழி வாய்க்காங்கரை தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து, சுரேஷ் காவி உடை அணிந்து சாமியார் போல அவதாரமெடுத்துக் குறி சொல்லும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
காவி உடையில் உலா வந்த சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது வீட்டிற்குச் சென்று சோதனை நடத்திய காவல்துறையினர், அங்கிருந்த அதிநவீன 9 எம்.எம் அதிநவீன பிஸ்டல் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களைக் கைப்பற்றினர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீனா நேரில் சென்று மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தினார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்த புராதன உலோகச் சிலைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன? மற்றும் அதிநவீன பிஸ்டல் துப்பாக்கி இவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது? என்ற கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சாதாரண இட்லி கடைக்காரர் வீட்டில் அதிநவீன பிஸ்டல் துப்பாக்கி மற்றும் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
