சிவகங்கையில் பரபரப்பு... அரசுப் பள்ளி மாணவருக்குக் கத்திக்குத்து!

 
சிவகங்கை அரசு பள்ளி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பள்ளி வளாகத்திற்குள் சக மாணவரைக் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இளையான்குடி பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஒரு மாணவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துச் சக மாணவரைக் கொடூரமாகக் குத்தியுள்ளார்.

கத்திக்குத்து

கத்திக்குத்தில் காயமடைந்த மாணவரைக் கண்ட ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அம்மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மோதலுக்கான காரணம் குறித்துப் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.