இலங்கையில் பரபரப்பு... "ராஜபக்சேவை தூக்கிலிட வேண்டும்!" - சரத் பொன்சேகா எம்.பி., முழக்கம்!
"இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த கொடூரமான போர்க் குற்றங்களுக்காக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது ராணுவத் தளபதியாக இருந்து, பின்னர் ராஜபக்சே குடும்பத்தோடு ஏற்பட்ட மோதலால் சிறை சென்ற சரத் பொன்சேகா, தற்போது ராஜபக்சேக்களுக்கு எதிராக மீண்டும் தனது ஆக்ரோஷமான குரலை உயர்த்தியுள்ளார்.

கொழும்புவில் செய்தியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற வட்டாரத்தில் பேசிய எம்பி சரத் பொன்சேகா, டெல்லி மற்றும் உலக நாடுகளின் பார்வையைத் திருப்பும் வகையில் கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்தார். அவர் பேசுகையில், "கடந்த கால உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு முழு முதற்காரணமே முன்னாள் அதிபர் ராஜபக்சே தான். அவருக்குத் தகுந்த தண்டனையாகத் தூக்குத் தண்டனை மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவரைத் தூக்கிலிடாவிட்டால், தற்போதைய அரசு நாட்டை ஊழலில் இருந்தும் துயரத்தில் இருந்தும் மீட்டுள்ளது என்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது."
தற்போதைய அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் செயல்பாடுகள் குறித்துச் சுட்டிக்காட்டிய பொன்சேகா, "அதிபர் அநுர திசாநாயக்க உண்மையிலேயே சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்ற வழக்குகளின் கீழ் அதிரடியாகக் கைது செய்ய முடியும். அதற்கான அனைத்து ஆதாரங்களும் தற்போதைய அரசிடம் உள்ளன" என்று செக் வைத்துள்ளார்.

இலங்கையின் இறுதிப் போரின் போது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு போர்க் குற்றச்சாட்டுகள் ராஜபக்சே மீது சர்வதேச அளவில் நிலுவையில் உள்ள சூழலில், அவருடன் இணைந்து போரை நடத்திய முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே "ராஜபக்சேவை தூக்கிலிட வேண்டும்" என்று பகிரங்கமாக முழங்கியிருப்பது, இலங்கை அரசியலை மீண்டும் ரணகளமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிபர் அநுர திசாநாயக்க அரசின் அடுத்தகட்ட மூவ் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
