ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு... தனியார் ஆலையில் பிரியாணி சாப்பிட்ட 100 பேருக்கு மயக்கம்... 10 பெண்கள் கவலைக்கிடம்... ஐசியூ-வில் அனுமதி!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில், மதிய உணவாக வழங்கப்பட்ட பிரியாணியைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குத் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தனியார் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், இங்குள்ள ஒரு பிரபல தனியார் ஆலையில் நேற்று மதிய உணவாகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது.

உணவைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, அடுத்தடுத்து பணியில் இருந்த தொழிலாளர்களுக்குத் திடீரென கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை குலைந்த தொழிலாளர்கள் ஆலை வளாகத்திலேயே ஆங்காங்கே சுருண்டு விழுந்தனர். ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஆலை நிர்வாகம், உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தது.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடுமையான நச்சு பாதிப்புக்குள்ளான 10 பெண் தொழிலாளர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் 10 பேரும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆலையின் சமையலறை மற்றும் உணவுக் கூடத்திற்குச் சீல் வைத்த அதிகாரிகள், அங்குப் பரிமாறப்பட்ட பிரியாணி மற்றும் உணவுப் பொருட்களை ஆய்வுக்காகக் கைப்பற்றியுள்ளனர். பிரியாணியில் ஏதேனும் நச்சு கலந்ததா? அல்லது கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பிற ஆலைத் தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
